70 ஆரம்ப பாடசாலைகள் வடக்கில் தரமுயர்த்தப்படும் – மாகாண கல்வி அமைச்சின் செயலர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தின் ஆரம்ப கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 35 கல்விக் கோட்டங்களிலும் தலா 2 பாடசாலைகள் வீதம் தெரிவு செய்யப்பட்டு மாதிரி ஆரம்ப பாடசாலைகளாக தரம் உயர்த்துவதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தின் ஆரம்ப கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கல்விக் கோட்டங்களிலும் தலா 2 பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்ப பாடசாலைகளான தரம் உயர்த்தப்படவுள்ளன. அந்தப் பாடசாலைகளுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் இதற்கான முன்னோடிக் கலந்தரையாடல் அண்மையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களின் கீழ் ஒள்ள 35 கல்விக் கோட்டங்களிலும் இருந்த தலா 2 பாடசாலைகள் வீதம் மொத்தம் 70 ஆரம்ப பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் சிறப்பு விளையாட்டு மைதானம், பொழுது போக்கு கூடம் உள்ளிட்ட சகல வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவதோடு இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றும் புதிதாக அமைக்கப்படும்.
இவ்வாறு தேர்வு செய்த 70 பாடசாலைகளில் 29 பாடசாலைகளில் ஏற்கனவே இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது அதேபோன்று இந்த ஆண்டில் 25 பாடசாலைகளுக்கு இரண்டு மாடிக் கட்டடத்தை அமைக்கும் நிதி கிடைக்கும் என உறுதி வழங்கப்பட்டதற்கு இணங்க 12 பாடசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டன. மேலும் 13 பாடசாலைகளுக்கான கட்டடங்கள் அமைக்கும் பணிகள் ஜீன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்தப்படும் ஆரம்பப் பாடசாலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள். குறித்த திட்டம் வடக்கு மாகாணத்தின் 35 கல்விக் கோட்டங்களிலும் ஒரே தடவையில் முன்னெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. கல்வியை மேம்பட வைக்கும் நோக்கில் ஆரம்பக் கல்வியில் இருந்தே மேம்படுத்துவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.
Related posts:
|
|