5 வருடங்களில் யாழில் குடிநீர் இல்லாது போகும் கடலில் மூழ்கும் அபாயம்!

Sunday, November 19th, 2017

புவியியல் மாற்றங்களுக்கு அமைய யாழ். குடாநாடு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு கடல் நீர்மட்டம் ஐந்து அடி உயரத்துக்கு அதிகரித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

தொடரும் அடை மழை காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் யாழ். குடாநாடு ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக துறைசார் அறிஞர்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ். குடாநாடு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் புவியியல் பேராசிரியருமான செனவி எப்பிட்டவத்த எச்சரித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இவ்வாறான எச்சரிக்கையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் சுத்தமான குடிநீர் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இதன்மூலம் விவசாயத் துறையில் பாரிய சரிவு ஏற்படக் கூடும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டு மக்கள் குடிநீருக்குப் பதிலாக கடல் நீரை குடிக்க நேரிடும். சில சந்தர்ப்பங்களில் யாழ். குடாநாடு கடலில் மூழ்கக் கூடிய அபாயம் உள்ளது. அந்த அபாயத்திற்கான ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முழுவதும் உள்ள சுண்ணாம்பு தட்டு;கள் கரைய ஆரம்பித்துள்ளன. அத்துடன் அது கடலுக்குள் செல்வதனால் குடிநீருடன் கடல் நீர் கலக்கப்படுகிறது. மக்கள் நிலத்தடி நீரினைப் பயன்படுத்தும் அளவிற்கு அதற்கு சமமான அளவு கடல் நீர் சாதாரண நீருடன் கலக்கப்படுகின்றது.

இதனால் இவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பேராசிரியர் செனவி எப்பிட்டவத்த குறிப்பிட்டுள்ளார்

Related posts: