25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தையடுத்து குழப்பம்!

Thursday, February 15th, 2018

நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் வட்டாரமொன்றில் கட்சியொன்று கூடுதலான வாக்குகள் பெறப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் 25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தை ஈடு செய்வது மிக சிரமமான விடயமாக அமைந்துள்ளது. இதன் மூலம் வெற்றிப் பெற்ற ஏனைய ஆண் பிரதிநிதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் இதனால் முறைப்படி சட்டத்தைப் பின்பற்றுவதா? அல்லது இல்லையா? என்ற குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பலர் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்துக்கான சட்டத்தை பின்பற்றுமாறே வலியுறுத்துகின்றனர் என்றும் கூறினார்;.

பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கியதன் மூலம் தேர்தல் பெறுபேறுகள் வெளியானது முதல் பாரிய குழப்பநிலை உருவாகியுள்ளது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தைப் பின்பற்றினால் வெற்றிப்பெற்ற ஆண் வேட்பாளர்களுக்கு அநீதி விளைவிக்கப்படும்.அத்துடன் பல உள்ளூராட்சி சபைகளை இயக்க முடியாத நிலை உருவாகும்.

இதனால் விரைவில் இதற்கான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதே இதற்குரிய சரியான தீர்வாக அமையும்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபை செயற்படுவதற்கும் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதனை தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டுமென சட்டம் வலியுறுத்துகிறது.

எவ்வாறாயினும் வெற்றிப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டிலும் குறைவாக இருந்தால், அவ்வாறான சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சபையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும் கட்சி அல்லது குழு தனக்குரிய ஆசனத்தையும் விட வட்டாரத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால் பட்டியலில் இருந்து எவரையும் நியமிக்க முடியாது என்றும் அதே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது..

அநேகமான உள்ளூராட்சி சபைகளில் பெண் பிரதிநிதிகளை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக காரைத் தீவின் முடிவுகளின்படி இரண்டு பெண் பிரதிநிதிகள் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிரதிநிதியை நியமிக்க முடியாத நிலை அங்கு உருவாகியுள்ளது.

தேர்தல் முடிவடைந்ததும் இவ்வாறான பிரச்சினை உருவாகும் என்பதை தேர்தல் ஆணைக்குழு முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தது. இச்சட்டம் இயற்றும்போதே நாம் இதுபற்றி தெரிவித்தோம்.

இதற்கு அவர்கள் நாம் அநாவசியமாக பாரதூரமாக சிந்திப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது விடயம் பாரதூரமடைந்து விட்டது’ என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்

Related posts: