25 ஆயிரத்து 648 இளையோர் வேலை கோரி யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு விண்ணப்பம் – மாவட்டச் செயலாளர் வேதநாயகன்

Tuesday, October 31st, 2017

25 ஆயிரத்து 648 இளைஞர்கள் வேலைவாய்ப்புக் கோரி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தமது விபரங்களைப் பதிவு செய்துள்ளனர் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற தொழிற்சந்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

பெரும் மனிதவளம் காத்திருக்கும் நிலையில் மறுபுறத்தில் வேலைக்கு ஆள்கள் இல்லை எனவும் ஒரு தொகுதியினர் கூறுகின்றனர். இங்கே கலந்து கொண்டுள்ள 44 நிறுவனங்கள் தமது துறைசார் பணியாளர்களைக் கோரி நிற்கின்றனர்.

இந்த தொழிற்சந்தை நான்கு தரப்புக்கு பயன் உள்ளதாக அமைந்தது. அதாவது தொழில் தேடுநர், தொழிலாளர்களைத் தேடுபவர்கள், அதே போன்று தொழிற்பயிற்சியை வழங்குபவர்கள் மட்டுமன்றி இதனை தொண்டாகப் பணியாற்றுபவர்களுக்கும் பயனளிக்கின்றது. எனவே மாவட்டத்தில் வேலையற்றுள்ள இளைஞர்கள் எந்தத் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்பதனை அறிந்து அந்த தொழிற் கல்வியைக் கற்கவும் தொழிற்கல்வியை வழங்கும் நிறுவனங்கள் அமைப்புக்கள் அந்தக் கல்வியை வழங்கவும் முன்வர வேண்டும். அவ்வாறானால் நீண்ட காலம் காத்திருக்காது உடனடியாகவே வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும் –  என்றார்.

Related posts: