21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்போது பட்டதாரி பயிலுனர்கள் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் – பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவுறுத்து!

Monday, October 18th, 2021

21ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் போது பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் கடமைக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

பொதுச்சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்வியமைச்சினால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட 18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்களும் கட்டாயமாக 21 ஆம் திகதி கடமைக்கு திரும்ப வேண்டும் என அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாடசாலைகளுக்கு தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் உதவியாளர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வலய கல்வி அலுவலக அதிகாரிகளை பாடசாலை நடவடிக்கைளில் ஈடுபடுத்துமாறு கல்வி அமைச்சினால், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

200 இக்கும் குறைவான மாணவர்கள் கொண்ட 5 ஆயிரம் பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் இரண்டு நாட்கள் கற்பித்தல் நடைபெறாது. அடுத்த வாரம் முதல் வகுப்பறை நடவடிக்கைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட கூடாதெனவும், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் எவ்வித அச்சமும் இருக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அன்றையதினம் கல்வி சாரா ஊழியர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தயார் என மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சின் செயலாளர் இதனடிப்படையில் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: