13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – இந்திய தூதரகம் தகவல்!

13 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர் உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 19 ஆவது திருத்தம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.
அதேபோன்று அரசாங்கத்தில் இன்னொரு தரப்பினர், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குதவதே நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன் 19ஆவது திருத்த சட்டத்தை நீக்கி, 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுமாயின் முழு அதிகாரம் ஒருவரின் கீழ் குவிக்கப்படும். இது சர்வதிகார போக்கிற்கு வித்திடுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்தியா 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு நிச்சயம் எதிர்ப்பை வெளியிடுமெனவும் சிறுபான்மை கட்சிகள் கூறி இருந்தன.
இந்நிலையிலேயே, 13வது திருத்தம் தொடர்பில் இந்திய தூதுவரின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்திய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நீண்ட கால நிலைப்பாட்டையும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதையும் இந்திய தூதுவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எனவும் அவர் குறித்த ஊடகத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|