விமானத்தில் இலங்கை வந்த ஐவரும் யார்? உடனடி விசாரணைக்கு கோரிக்கை!

Thursday, September 5th, 2019


அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு வந்து பொதிகளை சோதனையிட அனுமதி மறுத்த ஐந்து அமெரிக்கப் பிரஜைகள் குறித்து உடனடி விசாரணை அவசியம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திபில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

“கடந்த ஜுன் 30ம் திகதி அமெரிக்கர்கள் ஐவர் கொழும்பு ஹில்டன் விடுதிக்கு வந்தனர். அவர்களிடம் மிகப்பெரிய பொதிகள் இருந்தன. அவற்றை அங்கு பரிசோதனை செய்வதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் அவர்கள் நிராகரித்தனர்.

அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான விமானமொன்றிலேயே அவர்கள் கட்டுநாயக்கவுக்கு வந்திருப்பது பின்னர் தெரியவந்தது. வேறு எந்த பயணிகளும் அந்த விமானத்தில் பயணித்திருக்கவில்லை.

விமான நிலையத்தில் வைத்தும் அவர்களிடம் தகுந்த முறையிலான பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கவில்லை. குறித்த விடுதிக்கு சிறிது நேரத்தில் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கே.எல்.6586 என்கிற ஜீப் வண்டி வந்து பரிசோதனை செய்யப்படாத 06 பொதிகளும் எடுத்துச் செல்லப்பட்டன.

மேர்ஸியல் அலெக்சன்டர் மெக்லைன் என்கிற நபர் இவ்வாறு அந்தக் குழுவில் இடம்பிடித்திருக்கின்றார். இலங்கை வந்த சிறிது நாட்களில் கொண்டுவந்த பொதிகளை வைத்துவிட்டு மாலைதீவு சென்றிருப்பது ஏன்?

ஏன் சோதனை செய்ய இடமளிக்கவில்லை? வெடிகுண்டுகளா அதில் இருந்தன? எந்த அமெரிக்கரும் இங்கே வந்து நாடகம் ஆடலாம். கைவிடப்பட்ட நாடாக இது மாறிவிட்டது.

இதுபோன்று பலதடவைகள் பலரும் வந்துபோயிருக்கிறார்கள். ஐ.எஸ் தீவிரவாதம் என்பது அமெரிக்காவின் எடுபிடியாகும். எனவே தேசிய பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts: