வேகமாக பரவும் கொரோனா :அமெரிக்காவில் ஒரே நாளில் 1480 பேர் பலி!

Sunday, April 5th, 2020

இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் வீரியம் கூடியுள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1480 பேர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நேற்று ஒரே நாளில் மாத்திரம் அமெரிக்காவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8200 பேர் வரையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நியூயோர்க் மாகாணமே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்கில் மாத்திரம் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்றைய ஒருநாளில் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 630 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நகரத்தில் மாத்திரம் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3665ஆக உயர்ந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 64 ஆயிரம் பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜோன் ஹொப்ஹின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் நேற்று ஒருநாளில் மாத்திரம் 708 பேர் மரணமாகினர். ஸ்பெயினில் நேற்று மாத்திரம் 809 பேர் மரணமாகினர். எனினும் அது இந்த வாரத்தின் குறைந்த ஒருநாள் எண்ணிகையாக கருதப்படுகிறது.

இத்தாலியில் நேற்று 68 1பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது.

குவைத்தில் நேற்று முதலாவது கொரானா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது. 79 வயதான பெண் இந்த தொற்றுக்கு காவுகொள்ளப்பட்டுள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 75 பேர் மரணமாகியுள்ளனர். அங்கு 3072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: