வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022

வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் 100,000 டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், – “இன்று நாங்கள் எரிவாயு வரிசைகள், எண்ணெய் வரிசைகள், மின்வெட்டு, பால்மா தட்டுப்பாடு மற்றும் மருந்து பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒன்றாக வேலை செய்கிறோம். இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளோம்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நாங்கள் பெற்றால், வரிசைகளை அகற்றவும், மக்களுக்கு மருந்துகளை வழங்கவும், மின்வெட்டை நிறுத்தவும் முடியும் என்று அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்குள் ஒரு மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சில வரிச் சலுகைகளை வழங்கவும் நான் முன்மொழிகிறேன்.

இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்துடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம். சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கவும் நாங்கள் முன்மொழிகிறோம்.

மேலும், குறைந்தபட்சம் 50,000 டொலர்கள் அனுப்பப்பட்டிருந்தால், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கான மதிப்பெண் முறையை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: