வீதி விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றம்!

Monday, October 1st, 2018

ஆலயத்துக்குச் சென்று திரும்பி நடந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தரை அந்த வழியே வந்த உந்துருளி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தரும் உந்துருளியில் அமர்ந்திருந்த பெண்ணும் உந்துருளி சாரதியும் காயமடைந்த சம்பவம் நேற்றையதினம் நடைபெற்றது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் ஏ-9 முதன்மைச் சாலையில் சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள்  உடனடியாக சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் குறித்த பெண் ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நேற்றையதினம் இரவே மாற்றப்பட்டனர்.

குறித்த விபத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தலவாக்கலயைச் சேர்ந்த பாரதன்முத்து கம்புல் வயது-46 என்பவர் இராமாவில் கந்தசாமி கோவிலுக்கு நடந்து சென்று வழிபாடு முடித்துக் கொண்டு திரும்புகையில்,  சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம்  பெரிய நாவலடியைச் சேர்ந்த தம்பதியினர் சென்ற உந்துருளி மோதியதெனத் தெரிவிக்கப்பட்டது.

உந்துருளியில் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த செல்வரத்தினம் வசந்தாதேவி வயது-50 என்பவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிரந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக இன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: