வாக்குறுதிகளை வழங்குவது போன்றே நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

வாக்குறுதிகளை வழங்குவது போன்றே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டிவருகின்றது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாம் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் மூலமும் எமது எதிர்கால சந்ததியினரே நன்மையடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பூரண நிதி அனுசரணையின் கீழ் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முழு ஆதரவுடன் புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை இரண்டு கட்டங்களில் நிறைவுசெய்வதற்கு அப்போது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து செல்லவில்லை.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கொரோனா தொற்று நிலைமையை அடுத்து மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டமையால் கடந்த காலங்களில் விமான நிலையங்களை மூடினோம். நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், நம் நாட்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது என்று விமான நிலைய அபிவிருத்தி தடைப்படுவதற்கு எமது அமைச்சர்கள் இடமளிக்கவில்லை. மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிபடுத்தி, இருந்ததைவிடவும் சிறப்பாக சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு செயற்பட்டது.
அன்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படை பின்னணியை தயார்செய்து, திட்டத்தை செயற்படுத்தும் அளவிற்கே கொண்டு சென்றோம்.
இம்முறை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு மாறாக ராஜபக்சாக்களை பழிவாங்கும் நோக்கில் நெல்லை களஞ்சியப்படுத்தி இருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|