வாகன விபத்துக்களால் தினமும் 15 பேர் பலி – 5 மாதங்களில் 1514 பேர் உயிரிழப்பு!

Thursday, August 2nd, 2018

இந்த வருடம் மே இறுதி வரையான ஐந்து மாதங்களுக்குள் மட்டும் வாகன விபத்துக்களினால் 1,514 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தக் காலப்பகுதிக்குள் நீரில் மூழ்கிய விபத்துகளில் 291 பேரும் கொலைச் சம்பவங்களில் 182 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த மே வரையிலான காலப்பகுதியில் சராசரியாக தினமும் 15 பேர் வாகன விபத்துக்களிலும் 2 அல்லது 3 பேர் நீரில் மூழ்கிய விபத்துக்களிலும் ஒருவர் கொலைச் சம்பவங்களிலும் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய நீர் விபத்து மற்றும் கொலைச் சம்பவங்களை விட வாகன விபத்துக்கள் மூலமே மிகக் கூடுதலானோர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாகவும் மே வரையான ஐந்து மாதங்களுக்குள் 1514 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேவேளை 18,861 பேர் வாகன விபத்துக்களில் கடுமையான காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வாகன விபத்துக்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு அதி வேகமும் கவனமின்மையும் வாகனம் செலுத்துதல், மது போதை மற்றும் களைப்பு மயக்கத்தில் வாகனம் செலுத்துதல் ஆகியவை முக்கிய காரணங்களெனவும் வாகன நெருக்கடியான வேளைகளில் மட்டுமன்றி சாதாரண போக்குவரத்து வேளைகளிலும் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளைப் பொறுத்த வரையில் இந்த விபத்துக்கள் சுற்றுலாப் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலேயே நீரில் மூழ்கிய உயிரிழப்பு சம்பவங்கள் கூடுதலாக நிகழ்ந்துள்ளதாக இலங்கை உயிர்க்காப்புச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கொலைச்சம்பவங்களைப் பொறுத்த வரையில் 2014 இல் 477 கொலைகளும் 2015 இல் 432 கொலைகளும் 2016 இல் 466 கொலைகளும் 2017 இல் 452 கொலைகளும் நிகழ்ந்துள்ளதுடன் 2018 இல் ஐந்து மாதங்களில் 187 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இந்த வகையில் இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 450 கொலைகள் நிகழந்துள்ளன. இவ்வாறு அனைத்து உயிரிழப்பு சம்பவங்களையும் விட வாகன விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளே மூன்று மடங்காக நிகழ்ந்து வருகின்றன.

Related posts: