வவுனியாவில் அதிகளவு ஆசிரிய வெற்றிடங்கள்!
Wednesday, February 20th, 2019வவுனியா மாவட்டத்தில் தற்போதும் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும் தேசிய பாடசாலைகளில் மட்டும் மிகவும் அதிக ஆசிரியர்கள் தேவைக்கும் அதிகமாக கொட்டிக் கிடப்பதாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் மொத்தமாக தற்போது 111 பாடசாலைகள் உள்ளன. இதில் 5 தேசியப் பாடசாலைகளும் உள்ளடக்கம். இவ்வாறு காணப்படும் 111 பாடசாலைகளிலும் 29 ஆயிரத்து 700 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த மாணவர்களின் கற்பித்தல் பணிக்காக ஆயிரத்து 611 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 5 தேசிய பாடசாலைகளில் 7 ஆயிரத்து 400 மாணவர்கள் கற்கும் நிலையில் அதற்கான கற்பித்தல் பணிக்காக 473 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
எஞ்சிய 106 பாடசாலைகளிலும் கல்வி கற்கும் 22 ஆயிரம் மாணவர்களுக்காகவும் ஆயிரத்து 1150 ஆசிரியர்கள் கூட இல்லாத நிலமையே காணப்படுகின்றது. இதனால் வவுனியா தெற்கு வலயத்திலும் ஆரம்ப பிரிவு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உட்பட 345 ஆசிரியர்களுக்கு தற்போதும் வெற்றிடம் காணப்படுகின்றது.
நிலமை இவ்வாறு இருக்க தேசிய பாடசாலையான காமினி வித்தியாலயத்தில் தற்போது 234 மாணவர்கள் மட்டுமே பதிவில் உள்ளனர். அவர்களிலும் 50 மாணவர்கள் தொழில்முறை பயிற்சிக்காக சென்றுவிட்டனர். அவ்வாறானால் 184 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இங்கே மிகப் பெரும் ஆச்சரியமான விடயமாக 54 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அதாவது 3 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளார்.
இதேநேரம் இதே மாவட்டத்தில் பல பாடசாலைகளில் குறித்த பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலமையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
Related posts:
|
|