வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 14th, 2021

வங்காள விரிகுடாவின் தென் கிழக்குக் கடற்பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகே தாழமுக்க வலயம் ஒன்று உருவாகி உள்ளது என்றும், அது நாளை வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கலாம் என்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து மன்னார், புத்தளம், கொழும்பினூடாகக் காலி வரையான கடற்கரைப் பிரதேசங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழை வீழ்ச்சி கிடைக்கும் நேரத்தில் கடற்கரைப் பிரதேசங்களில் கடுமையான காற்று நிலைமை ஏற்படக்கூடும். கிழக்கு மாகாணக் கடற் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாழமுக்கம் வளர்ச்சியடைந்து 18ஆம் திகதி இந்தியாவை அண்மித்த கடற்பிரதேசங்களுக்குப் பயணிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் மழைக்கான சாத்தியங்கள் உள்ளன.

இதேவேளை நாடளாவிய ரீதியில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: