‘ரொக் டீம்’ குழுவைச் சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்படுவர்!

Wednesday, May 11th, 2016
அண்மைய காலமாக குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்து ”ரொக் டீம்” ரவுடி கும்பல்  நேற்றுமுன்தினம் (09) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த குழுவுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசேட திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். குடாநாட்டில் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் பதிவான பல்வேறு குற்றச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்.பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது 5 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் (09) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 18 மற்றும் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களுள் யாழ்.பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களும் அடங்குவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், மூன்று வாள்கள், கைக் கோடாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பது, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று அல்லது நால்வர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts: