ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை அறிவித்தது இந்தியா!

Saturday, February 26th, 2022

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது.

மொத்தமுள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன.

11 நாடுகள் ஆதரவு தெரிவித்தபோதிலும் நிரந்தர உறுப்பினருக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா தோல்வியுறச் செய்தது.

வாக்கெடுப்பில் பங்கேற்காதது தொடர்பாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி அளித்துள்ள விளக்கத்தில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மனித உயிர்களை விலையாக வைத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. பேச்சுவார்த்தை பாதையை கைவிட்டது வருத்தம்கொள்ள செய்கிறது. நாம் அந்த பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இந்த அனைத்து காரணங்களுக்காகவே தீர்மானத்தை இந்திய புறக்கணித்ததாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: