யுத்தத்தால் அழிவடைந்து கிடந்த யாழ் மாவட்டத்தை தூக்கி நிறுத்தியவர்  டக்ளஸ் தேவானந்தா – தோழர் கி.பி!

Saturday, January 20th, 2018

கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரங்களைக்கொண்டு எமது மக்களுக்கு எதனையும் செய்யாதவர்கள் எதிர்காலங்களிலும் கிடைக்கப்பெறுகின்ற அரசியல் பலத்தைக் கொண்டு ஒருபோதும் எதனையும் செய்யமாட்டார்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தத்தால் அழிவடைந்து கிடந்த யாழ் மாவட்டத்தை தனக்குக் கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினூடாக பாரிய மாற்றத்துக்கு கொண்டுவந்த பெருமை எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையே சாரும். இன்று பலரும் அதற்கு உரிமை கோரி வருகின்றமையானது வேதனையளிக்கும் விடயமாகவே இருக்கின்றது.

ஆட்சி மாற்றத்தை தாமே கொண்டுவந்தவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று மக்களுக்காக எவ்விதமான காரியங்களைச் செய்துள்ளார்கள் என்று பார்த்தால் ஒன்றையும் செய்யவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. உண்மையும் அதுதான்.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அரசியல் கைதிகளை விடுவிப்போம் காணிகளை விடுவிப்போம் இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றெல்லாம் கூறி மக்களின் வாக்குகளை அபகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்றுவரை அதில் ஒன்றைக்கூட உருப்படியாக நிறைவுசெய்து கொடுக்கவில்லை.

அதுமாத்திரமன்றி வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றியபோது தமிழராட்சி மலர்ந்ததென்று இவர்களே கூறியிருதார்கள். ஆனால் இன்று அவர்கள் கொண்டுவந்த தமிழராட்சிக்கு என்ன நடந்ததென்பதை மக்கள் நன்கறிந்துள்ளார்கள்.

இதன் காரணமாகவே மக்கள் ஒரு மாற்றுத் தலைமையை விரும்புகின்றார்கள். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை எமது கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Related posts:


அடுத்த வாரம்முதல் தடையின்றி மின் விநியோகம் வழங்க ஏற்பாடு - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சி...
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டம் - யாழ்...