யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவும் , மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/432, J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் குறிப்பிட்டுள்ளது..

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. நேற்று மட்டும் 395 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன் தொற்றால் 9 பேர் உயிரிழந்தனர் என்றும் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கைதடி முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் நேற்றிரவு வரை இதுவரை 12 ஆயிரத்து 480 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக நேற்றையதினம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதேவேளை கடந்த 2020 மார்ச் தொடக்கம் யாழ் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளும் யாழ் மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்களில் மொத்தமாக 2 இலட்சத்து 89 ஆயிரத்து 855 பேர் தமது தடுப்பூசியை பெற்றுள்ளார்கள்.

தொடர்ச்சியாக தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.அத்தோடு எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது. இதில் இராணுவத்தினரும் தற்போது கைகோர்த்து தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள்.

தடுப்பூசிகளை விரைந்துபெற்றுக்கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும். எமது இறப்புக்களை தவிர்க்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி தங்களையும் , சமூகத்தையும் பாதுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதது

Related posts: