யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல் !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றையதினம் 5 ஆயிரத்து 957 ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார்.
அத்துடன், யாழ்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் கொரோனாத் தடுப்பூசி மருந்துகளில் நேற்று ஐந்தாவது நாளில் 7 ஆயிரத்து 266 பேர் தமக்கான முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் கடந்த ஐந்து நாள்களில் 45 ஆயிரத்து 722 பேர் கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10 ஆயிரத்து 354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களில் 5 ஆயிரத்து 957 பேருக்கு நேற்று கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
கல்வியமைச்சுடன் இணைந்து அமைச்சின் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் தலைமையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் –
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றும் அதேவேளை, தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் தரப்பினர் தொடக்கம் முன்னுரிமைப்பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் பல தரப்பினராலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் நீண்டகாலத்திற்கு நாட்டை முடக்கிவைக்க முடியாது. அதுமாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை மீளஆரம்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது.
அதன்படி கல்வியமைச்சுடன் இணைந்து கல்வியமைச்சின் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை நாம் இன்று ஆரம்பித்திருக்கிறோம்.
அதேநேரம் நாட்டின் தடுப்பூசிக் கையிருப்பிற்கு அமைவாக நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலை ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்படும் அதேவேளை, அதன்மூலம் படிப்படியாக பாடசாலைகளை மீளத்திறக்கமுடியும்.
அதேபோன்று எமது நாட்டில் சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாடுகள் சிலவற்றில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே எதிர்வரும் காலத்தில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவது குறித்த செயற்திட்டத்தைத் தயாரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு படிப்படியாக நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாப்புப்பெற்ற நாடாக இலங்கையை மாற்றமுடியும் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|