யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை – பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம்முதல் வழங்க நடவடிக்கை என அரசாங்க அதிபர் மகேசன் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம் வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலர் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கும், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச செயலர் ஊடாக அரச ஊழியர்களுக்கும் பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஜீவனோபாய தொழிலாளர்கள், அத்தியாவசிய அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் சகலருக்கும் தேவையின் அடிப்படையில் அளவு கணக்கிடப்பட்டே எரிபொருள் விநியோகம் நடைபெறும். எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: