யாழ்.குடாநாட்டில் 1900 ஹெக்டேயரில் பெரும் போக வெங்காயச் செய்கை : வெங்காயச் செய்கையாளர்கள் நன்மை

Sunday, April 3rd, 2016

யாழ்.  குடாநாட்டில்  சராசரியாக  1900 ஹெக்டேயரில் பெரும் போக வெங்காயச் செய்கை பயிரிடப்பட்ட நிலையில்  ஒரு ஹெக்டேயரிலிருந்து 15 தொடக்கம் 20 வரையான தொன் விளைச்சல் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் கடந்த இரு வருடங்களை விட இவ்வருடம் விவசாயிகள் தாம் எதிர்பார்த்த இலாபத்தைப் பெற்றுள்ளதாகவும்  திருநெல்வேலி விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கே. ஸ்ரீபாலசுந்தரம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடாநாட்டில் பெரும் போக வெங்காயச் செய்கைக்கான அறுவடை கடந்த மாத இறுதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அடுத்த சிறு போக விதை வெங்காயத் தேவைக்கு மாத்திரம் 4000 தொன் விவசாயிகளால் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. உள்ளுர் நுகர்ச்சிக்கு  மாதாந்தம் சராசரியாக 600 தொன் வெங்காயம் தேவைப்படுகின்றது. மீதி வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த இரண்டு வருடங்களாகக் கால போகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மழை வீழ்ச்சி மற்றும் 2014 ஆம் ஆண்டு,2015 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏற்பட்ட திடீர்ப் பனிப் பொழிவு காரணமாக யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்டிருந்த பெருமளவு வெங்காயப் பயிர்ச் செய்கை நோய்த் தாக்கங்களுக்கு உள்ளானது. ஆனால், இந்த வருடம் சுமாரான பனிப் பொழிவு காணப்பட்ட காரணத்தால் வெங்காயச் செய்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாகக் கடந்த வருடம் ஒரு ஹெக்டேயரிலிருந்து 13 அல்லது 14 தொன் வெங்காய அறுவடையைப் பெற்ற வெங்காயச் செய்கையாளர்கள் இந்த வருடம் ஒரு  ஹெக்டேயரிலிருந்து 15 தொடக்கம் 20 தொன் வரை விளைச்சலைப் பெற முடிந்துள்ளது. இதன் மூலம் யாழ்.குடாநாட்டின் வெங்காயச் செய்கையாளர்கள் நன்மையடைந்துள்ளனர் என்றார்.

3a12a3de-1adb-40ea-866b-43f46382fbcd

Related posts: