குற்றங்களுக்கு பொலிஸாரின் அசமந்தப்போக்கும் காரணம் – மாவட்ட செயலர்.

Wednesday, April 27th, 2016

‘யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் பொலிஸார் அசமந்தமாக செயற்படுவதாக எனக்கும் முறைபாடுகள் கிடைத்துள்ளன. இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது’ என யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்

யாழ். மாவட்ட சிவில் சமூக கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (26)இடம்பெற்றது. இதன் போது மேற்படி விடயத்தினை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு மாவட்ட செயலாளர் கொண்டுவந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘குறிப்பாக கொள்ளை சம்வங்கள், வேறு பல குற்ற செயல்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்துக்கு வருவதில்லை எனவும் தகவல் வழங்கி 12 மணித்தியாலங்கள் கழித்து வருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதனை விட, சில குற்றச்செயல்களுக்கும் கொள்ளை சம்பவங்களுக்கும் பொலிஸார் துணைபோவதாகவும் இவ்வாறு பொலிஸாரின் செயற்பாட்டால் இரவு 6 மணிக்கு பின் வீட்டில் இருப்பதற்கு பயமாக உள்ளதாகவும் தான் நாட்டை விட்டு வெளியேறுவதை விட வேறு வழியில்லை என தனிநபர் ஒருவர் என்னிடம் முறைபாடு செய்துள்ளார்.

எனவே, இவ்விடயத்தினை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. மக்களின் நலனிலும் பாதுகாப்பிலும் நாம் கவனத்திடன் செயற்படவேண்டும்’ என மாவட்ட செயலாளர் கூறினார்.

Related posts: