யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை புனரமைப்பது குறித்து புதிய உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ளவுள்ளதாகவும் அதற்காக இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விமான நிலையங்கள் புனரமைப்பில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பாரிய நஷ்டத்தை நாம் சந்திக்க நேர்ந்தது, ஆறு ஆண்டுகள் எந்தவித அபிவிருத்தியும் மேற்கொள்ளாத நிலையில் நாட்டிற்கு மூவாயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த பத்து மாதங்களில் விமான நிலையங்கள் திறக்கப்படாததனால் ஏற்பட்ட நஷ்டமானது 2.4 பில்லியம் ரூபாவாகும். எனவே மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ள சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சலுகைகள் பலவற்றை வழங்கி மத்தள மற்றும் இரத்மனால விமான நிலையங்களுக்கு பயணிகளை கொண்டுவரவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டுநாயக விமான நிலையத்தை புனரமைப்பதும், மத்தள விமான நிலையத்தை பிரதான விமான நிலையமாக மாற்றுவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அத்துடன் இரத்மலான விமான நிலையத்தை புனரமைக்கவும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் பிரதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் அவசர அவசரமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டாலும் கூட அதற்கான அத்தியாவசிய தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை.
கடந்த காலத்தில் அரசாங்கத்தின் சில செயற்பாடுகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது, எனவே புதிய உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்வது குறித்து இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|