மே 9 வன்முறைகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் – எட்டு சுயாதீன உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கூட்டாகக் கடிதம்!

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அவற்றுடன் தொடர்புடையோருக்கான தண்டனையை பரிந்துரைக்கக் கூடிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கலாநிதி ஜீ.வீரசிங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அத்துரலியே ரதன தேரர் மற்றும் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பமான வன்முறைகள் காலி முகத்திடல் வரை சென்றதோடு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பரவியது.
அலரி மாளிகைக்கு நபர்களை அழைத்து வந்த பேரூந்துகளின் இலக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டமையானது வெவ்வேறு நபர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட வன்முறை செயற்பாடுகள் என தோன்றுகிறது.
நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தியது. வீடுகள் மற்றும் பிற சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட வீடுகளில் இருந்த வளங்கள் சூறையாடப்பட்டன. பல்வேறு மக்கள் கொல்லப்பட்டனர்.
சில இடங்களில் மக்கள் உடல் நசுங்கி இறந்தனர். சம்பவங்கள் நடந்த விதத்தில் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் சிலர் தெரிவித்தனர். இவை திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டவை என்றே தோன்றுகின்றன.
இச்சம்பவங்கள் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்திய அச்சமும் அழுத்தமும், நாட்டில் உருவாகியுள்ள கரும்புள்ளியாகும். சர்வதேச அளவில் நாட்டிற்கு ஏற்பட்ட அவப்பெயரும் மிகவும் பலமிக்கதாகும்.
அலரிமாளிகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் தொடக்கம், அதற்கு முன்னர் சில நாட்களாக நாட்டில் வெடித்த வன்முறைகள் என்பன தொடர்பில் ஆராயப்பட வேண்டும்.
அந்த வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அதற்குக் கட்டளையிட்டவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள், திட்டமிடுபவர்கள், குற்றவாளிகள் ஆகியோரை நாட்டின் முன் அம்பலப்படுத்த வேண்டும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இதுபோன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கலாம்.
அதற்கமை மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனைகளை பரிந்துரைப்பதற்கும் பொறுத்தமான அதிகாரத்தைக் கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை) நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|