முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூதுவர் உறுதியளிப்பு!

Wednesday, March 31st, 2021

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் ஹோ தீ தான் ரக் நேற்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் புதிய வியட்னாம் தூதுவரும் தற்போதைய இருதரப்பு உறவுகள், எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

வியட்னாம் அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு தெரிவித்த ஹோ தீ தான் ரக், இலங்கையுடனான உறவுகளை பேணுவதற்கு வியட்னாம் உயர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது நாடு முகங்கொடுத்த சிக்கலான காலங்களில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை வியட்னாம் தூதுவர் பாராட்டியதோடு, தமது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, நட்புறவை மென்மேலும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது வியட்னாமிற்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவை பாராட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் இலங்கையில் காணப்படுகின்ற பொருளாதார முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அதன் மூலம் பயனடையுமாறு வியட்னாமிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலாதுறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் முதலீடு செய்வதற்காக வியட்னாம் வர்த்தகர்களை ஊக்கப்படுத்துவதாகவும் வர்த்தக, சுற்றுலா துறைகளின் அபிவிருத்திக்கு உயர் முக்கியத்துவம் வழங்குவதாகவும் வியட்னாம் நாட்டுத் தூதுவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: