மின்னுற்பத்தி தொடர்பில் பொதுக் கொள்கை வழிகாட்டியை வெளியிடுவதற்கு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 14th, 2021

மின்னுற்பத்தி தொடர்பில் பொதுக் கொள்கை வழிகாட்டியை வெளியிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

‘சுபீட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைய 2030 ஆம் ஆண்டளவில் எமது நாட்டின் மின்சக்தித் தேவையில் அதிகளவு மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எமது நாட்டின் ஒட்டுமொத்த மின்சக்தித் தேவையின் 70% வீதமானவை 2030 ஆம் ஆண்டளவில் மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்கள் மூலம் பூர்த்தி செய்வதற்கும்,

2050 ஆம் ஆண்டாகும் போது எமது நாட்டின் மின்னுற்பத்தியில் முழுமையாக காபன் நீக்கப்பட்ட நிலைமையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த கொள்கைச் சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சக்தி சட்டம் மற்றும் குறித்த சட்டத்தின் திருத்தங்களுக்கமைய இலங்கை மின்சார சபையால் ‘குறைந்த செலவில் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம்’ தயாரிக்கப்பட வேண்டும்.

குறித்த மின்னுற்பத்தி திட்டத்தைத் தயாரிப்பதற்காக குறித்த சட்டத்தின் 5 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் மின்சக்தி அமைச்சர் பொதுக் கொள்கை வழிகாட்டியொன்று மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த வழிகாட்டியை வெளியிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: