மரக் கடத்தலை தடுப்பதற்கு கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்!

Thursday, May 30th, 2019

சட்டவிரோதமான முறையில் வெட்டுமரங்களை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், காடழிப்புக்கு ஏதுவாக அமையும் சகல செயற்பாடுகளையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சட்டவிரோத மரக் கடத்தலை தடுப்பதற்காக நாடு முழுவதும் பரந்தளவிலான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கான சட்ட திட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியதுடன், பாரிய செயற்திட்டங்களினூடாக வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதைப் போன்று வன வளங்களைப் பாதுகாப்பதற்கான சட்ட விதிமுறைகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அனைத்து வகையான சின்சோ வாள்களையும் தடைசெய்வதற்காக அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து விசாரித்த ஜனாதிபதி, அவற்றை நாட்டிற்குள் கொண்டுவருவதனை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் புதிதாக மர வேலைத்தளங்களை பதிவு செய்வதனை தடைசெய்தல் தொடர்பாகவும் எதிர்வரும் ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வனப் பாதுகாப்பு மற்றும் மர நடுகை செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரதூரமான சுற்றாடல் சவால்களுக்கு தீர்வாக நாட்டின் வனப் பரம்பலை 2030ஆம் ஆண்டளவில் 32 சதவீதமாக அதிகரிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிஸ் ஒப்பந்தத்தின் ஒரு பங்குதாரர் என்ற வகையில் அதன் இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கும் அரச மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கும் உரித்தான குறை பயன்பாட்டுக் காணிகளை வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் துரித செயற்திட்டங்களுக்காக உபயோகிக்க எதிர்பார்க்கப்படுவதோடு இவ்விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related posts: