மன்னார் மாவட்டத்தில் கடும் மழை – பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின – 12 ஆயிரத்து 350 பேர் பாதிப்பு!
Tuesday, November 9th, 2021நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழையால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்து 501 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளாரர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார், பேசாலை, தாழ்வுபாடு, மன்னார் சாந்திபுரம், சௌத்பார், ஜிம்ரோன் நகர் உள்ளிட்ட மன்னார் நகர் பகுதியில் உள்ள பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மடுக்கரை உள்ளிட்ட சில கிராமங்களில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடத்தல் தீவு, தேவன் பிட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு உள்ளமையினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடிகள் சேதமாகி உள்ளதோடு, படகுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் பிரதேச செயலாளர் பிரிவில் 3 ஆயிரத்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 631 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் இடம் பெயர்ந்து 2 தற்காலிக நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 325 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 8 குடும்பங்க ளைச் சேர்ந்த 39 நபர்களும், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 628 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மக்கள் இடம்பெயர வில்லை.
இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 105 நபர்கள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து 3 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|