மன்னார் சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம் !

Wednesday, September 15th, 2021

மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்றுமுதல் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது.

அத்துடன் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று 15 ஆம் திகதிமுதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டமைக்கான அட்டை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் கோவிட் தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களின் முழுமையான விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசியைச் செலுத்தவும் அல்லது அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது.

இதன் அடிப்படையில் இது வரையில் 71 ஆயிரத்து 396 பேர் முதலாவது கோவிட் தடுப்பூசியையும் , 56 ஆயிரத்து 363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: