மக்களின் ஏமாற்றம் நியாயமானது – நாடாளுமன்றுக்கு வெளியில் சென்று அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது – அலி சப்ரி திட்டவட்டம்!

Thursday, April 7th, 2022

மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையை தாம் புரிந்துகொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதையம் புரிந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு தனிப்பட்ட முறையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் நாட்டை மீட்டெடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கின்ற நெருக்கடியை தீர்க்க முடியாது என்று முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்பதாக  சபையில் உரையாற்றிய ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி பதவி விலகாமல் முன்வைக்கப்படுகின்ற எந்த யோசனைகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றே போராட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் பதவி விலகாமல் அவரால் முன்வைக்கப்படும் என்ற யோசனைகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அவ்வாறு ஜனாதிபதி தமது பதவியில் இருந்து கொண்டு முன்வைக்கின்ற எந்த யோசனைகளும் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.

மேலும் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புரட்சியை காலம் தாழ்ந்து தணித்துவிடலாம் என்று அரசாங்கம் நினைக்குமாக இருந்தால் அதும் நடக்காது என்று அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நடைபெறுகின்ற போராட்டங்கள் வன்முறைகளாக மாறுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை அடுத்து உரையாற்றிய அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ பதவி விலகப் போவதில்லை என்பதை உறுதிபட அறிவித்தார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான யோசனை ஒன்று விரைவில் முன்வைக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

பின்னர் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அனுரகுமார திஸாநாயக்க கோருவதைப் போல, அரசியல் யாப்புக்கு அப்பால் சென்று, நாடாளுமன்றுக்கு வெளியில் அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று தெரிவித்தார்.

அவ்வாறான தீர்வு ஒன்று வழங்கப்படுமாக இருந்தால், நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடோ, எரிவாயு தட்டுப்பாடோ நீங்கப்போவதில்லை. மக்களது போராட்டங்கள் நிற்கப் போவதில்லை என்று அலி சப்ரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய சபை அமர்வுக்கு இடையில் நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தார்

சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்த அவர் பின்னர் வெளியேறினார்.

அவர் சபைக்கு வரும் போது ஆளுங்கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கோஷம் எழுப்பி இருந்தனர்.

ஜனாதிபதி ஒருவர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை சபை அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படையில் அவரது இன்றைய பிரவேசம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: