போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” – நீதி அமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு!

Monday, July 3rd, 2023


முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ஆகியோர் தவிர்த்துள்ளனர்.

அத்துடன் “போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும்” என்று நீதி அமைச்சர் கருத்தும் வெளியிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் கடந்த 29ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன. இது தொடர்பான மேலதிக அகழ்வுகள் எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் – பங்கேற்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் வலியுறுத்தப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க “இந்த விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.  நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரம். நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அடுத்தகட்டப் பணிகள் இடம்பெறும். இதைவிட மேலதிகமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.”  என தெரிவுத்துள்ளார்.

இன்நிலையில் நீதி அமைச்சர் விஜயதாஸ –

“போர் இடம்பெற்ற பகுதிகளில் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தோண்டும் போது சடலங்களும் ஆயுதங்களும் மீட்கப்படும். முல்லைத்தீவு புதைகுழியிலிருந்து போரில் ஈடுபட்ட ஒருதரப்பின் சீருடைகள் மீட்கப்பட்டதாக அறிந்தேன்.

நீதிமன்றம் அந்தப் புதைகுழியை அகழ்வதற்கான உத்தரவையும் விடுத்துள்ளது. அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் இப்போது எல்லாம் பதிலளிக்கமுடியாது. அதேவேளை அந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கும் என்னால் பதில் கூற முடியாது.” – என்றும் தெவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: