போக்குவரத்து விதிமீறல் – 25,000 ரூபா தண்டப் பணம் 3,000 ரூபாவாகக் குறைப்பு !
Saturday, April 7th, 2018வீதி ஒழுங்கு விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு ஸ்தலத்திலேயே அறவிடப்படும் அதி கூடிய தண்டப்பணமான 25,000 ரூபா 3000 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளுக்கு நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.
இவ்விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க, இந்த ஒழுங்கு விதிகளால் வீதி ஒழுங்குகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படக்கூடிய 25,000 ரூபா தண்டப்பணம் 3,000 ரூபாவாகக் குறைக்கப்படுகிறது. அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளை மீறும் வாகன சாரதிகளிடம் அதிகூடிய ஸ்தல தண்டப்பணமாக 25,000 ரூபா அறவிடப்படும் என 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த யோசனைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இந்த நிலையில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், இது பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதி குழுவொன்றையும் நியமித்தார். இந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய ஆகக் கூடிய தண்டப்பணமாக 3,000 ரூபா தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விதிகளை மீறிய சாரதிகளிடம் ஸ்தலத்தில் ஆகக் கூடிய தண்டப் பணமாக 3,000 ரூபாவும், ஆகக் குறைந்த தண்டப் பணமாக 500 ரூபாவும் அறவிடப்படும்.
வெள்ளிக்கிழமை முதல் 33 வீதி விதிமீறல்களுக்கு 3,000 ரூபா முதல் 500 ரூபா ஸ்தல தண்டப்பணம் அறவிடப்படும். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.
இது மாத்திரமன்றி தங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட கரவான் மற்றும் முச்சக்கர வண்டியைப் போன்று ட்ரொடி சைக்கிள்கள் தொடர்பிலும் ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதனையும் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Related posts:
|
|