பொலிஸாருக்கு ஊக்குவிப்பு பரிசு வழங்கி இலஞ்சத்தை கட்டுப்படுத்த புதிய முயற்சி!  

Friday, October 14th, 2016

விசேட அலுவல்களில் ஈடுபடும் பொலிஸாருக்கான ஊக்கப்பரிசுத் தொகையை துரித கதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தகவல் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பொலிஸார் திறமையாக செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஊக்கத் தொகையொன்றை வழங்குவது பொலிஸ் திணைக்களத்தின் நடைமுறை வழக்கமாகும்.எனினும் இதுவரையும் அவ்வாறான ஊக்கத் தொகைகள் பல வருடங்கள் கழிந்த பின்னரே வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறையை மாற்றியமைக்க பொலிஸ்மாஅதிபர் திட்டமிட்டுள்ளார்.

இதன் ஆரம்ப கட்டமாக பொலிஸாருக்கு வழங்கப்படும் ஊக்கப் பரிசுத் தொகை மூன்று கட்டங்களில் விரைவாக வழங்கப்படவுள்ளது. குறித்த பரிசுத்தொகையுடன் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்படவுள்ளது.ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் மூலமாக குறித்த ஊக்குவிப்புத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடமையில் அர்ப்பணிப்பு, நேர்மை தொடர்பில் பொலிஸாரை ஊக்குவிப்பதுடன், அவர்களின் பொருளாதார நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி பொலிஸார் மத்தியில் வழக்கத்தில் உள்ள இலஞ்சம் வாங்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கு முடியும் என்று பொலிஸ்மா அதிபர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

poojith-jayasundara-dig

Related posts: