பெரும் விபத்துகளை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு கொலை குற்றச்சாட்டு – பொலிஸார் அறிவிப்பு!

Thursday, July 30th, 2020

அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தி, அதன்மூலம் ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸ் சட்ட பிரிவின் இயக்குநர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்தகைய நபர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தண்டனை சட்டத்தின் 294வது பந்தியின் 4வது பிரிவு தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி நுகேகொட மேம்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இராணுவ கெப் ரக வாகனத்துடன், பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடத்தவும், சாரதி மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ்மா அதிபர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னர் சாரதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்தின் 294 வது பந்தியின் 4வது பிரிவு இதற்கான தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: