பெண்ணியம் என்பது மார்ச் 8 ஆம் திகதி மட்டும் பேசப்படும் பொருளல்ல – யாழ் மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர் வேதவல்லி!

Monday, March 13th, 2017

பெண்ணியம் என்பது மார்ச் 8ஆம் திகதி மட்டும் பேசப்படும் ஒரு பொருளல்ல. அது என்றும் எமது இதயத்திலே சம உணர்வுகளுடன் போற்றப்படவேண்டிய தினமாகும் என யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் செயலாளர் வேதவல்லி தெரிவித்துள்ளார்.

இன்று சம உரிமை என்றால் ஆண்களுக்கு சமனாக ஆடையணிந்து இரவு 12 மணிக்கு தெருவில் நின்று தொலைபேசியில் பேசுவதுதான் சம உரிமைய என்று பெண்கள் கருதுகின்றனர்.

பெண்கள் தமது சமூக கலாச்சார விழுமியங்களை போற்றி பாதுகாத்து சமரீதியான தொழில் வாய்ப்புக்களையும், கல்வி வாய்ப்புக்களையும் பெற்று வீட்டிலும் சமூகத்திலும் நாட்டிலும் எல்லா சிறப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்காக போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

குறிப்பாக இன்று பெண்கள் முன்னிலையில் இருக்கின்ற போராட வேண்டிய விடயங்களாக குடும்ப வன்முறை உள்ளது. இது எமது நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் இருந்தே வந்திருக்கின்றது

பல பெண்கள் தங்களுடைய குடும்பத்திலே தங்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை வெளியே சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர். பெண்கள் தமது குடும்ப சுமையை பல்வேறு விதங்களில் சுமக்கின்றார்கள்.

குறிப்பாக கணவரால் கைவிடப்பட்ட, கணவரின் ஊதியம் போதாமல், அல்லது கணவர் தவாறான பழக்கங்களினால் சீரழிந்த செல்கின்ற நிலைமைகள் போன்ற காரணங்களால் தமது குடும்ப சுமைகளை சுமப்பதுடன் குழந்தைகளையும் காப்பாற்றி சமூகத்தில ஒரு நல்ல பிரையைகளாக வழிநடத்துவதில் அதிகளவு துன்பங்களை அனுபவித்துவருகின்றார்கள்.

மேலோட்டமாக சமூதாயத்தை பார்க்கும் போது பெண்கள் படிக்கிறார்கள், உழைக்கிறார்கள் ஊயர் பதவி வகிக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களது உள்ளக் கிடக்கைகளை பார்க்கின்ற பொழுது பெண்களுக்கு அதிகமான பிரச்சினைகள் இருப்பதை காணமுடிகின்றது. ஆகவே பெண்கள் அதிகமான ஜனநாயக உரிமைகள் பற்றியும் ஜனநாயக ரீதியாக பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பாகவும் நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று கூட்டுறவு துறையை எடுத்துகொண்டால் கூட்டுறவில் ஆண்,பெண், சமயம், சாதி என்ற எந்த வேறுபாடும் காணப்படுவதில்லை. மனிதன் என்ற அடிப்படையில் உழைக்கின்ற ஒரு நிறுவனமாக அதை நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருக்க வேண்டிய தேவை அங்கே இருக்கின்றது.

இன்று எமது பிரதேசத்தில் 60 இற்கும் மேற்பட்ட பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்த கூட்டுறவு அமைப்புக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு அமைப்பிலும் ஒரு பெண் தலைமை தாங்குவதாகயில்லை.

இயங்கு நிலையில் இருக்கின்ற எந்தவொரு நிறுவத்தின் பொதுச் சபைகளை பார்ப்போமானால் அங்கே இருக்கின்றவர்கள் ஆண்களாகத்தான் இருக்கின்றார்கள். இதனால் நாங்கள் அவர்களுடன் அடிக்கடி போராட வேண்டியதேவை உருவாகுகின்றது.

ஆனால் அவர்கள் சொல்வார்கள் பெண்கள் ஜனநாயக ரீதியாக உள்ளே வருவதற்கு என்ன தடை இருக்கின்றது என்றும் ஏன் அவர்கள் குறித்த துறைகளில் வராமல் இருக்கின்றார்கள் என்று கேட்கிறார்கள்

யாழ் மாவட்ட கூட்டுறவுசபையின் பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள் அனைவரும் ஆண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்று அண்மையில் வெளிவந்த ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. அதே பத்திரியைணில் எமது பெண்களுக்கு உரிமை வழங்கப்படவில்லை என்று மறுநாள் செய்தியாக வந்திருந்தது.

எமது மாவட்ட கூட்டுறவுசபையின் பொதுச்சபையில் கணிசமான பெண்கள் வந்திருந்தனர். அந்தப் பெண்களிடம் ஏன் இந்த பதவிக்கு நீங்கள் போட்டியிடவில்லை என்று கேட்ட பொழுது சில ஆண்கள் நீங்கள் போட்டியிட வேண்டாம் என்று சொன்னார்கள் அதனாலேயே நாங்கள் போட்டியிடவில்லை என்று சொன்னார்கள்.

இதனூடாக சமூகத்தில் இன்றும் பெண்கள் அடங்கி வாழும் ஒரு நிலைக்குள்தான் இருக்கின்றொம் என்பதையும் ஆண் ஆதிக்கம் என்ற ஒரு நிலைக்குள்தான் தொடர்ந்தும் பெண்கள் இருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.

ஆகவே எமது பிரதேசத்தை உற்றுநோக்கும்போது பல பெண்கள் வேலையின்றி இருக்கின்றார்கள். பல பெண்கள் தங்களுக்கு பொருத்தமில்லா துறைகளிலே வேலைவாய்ப்பினை பெற்றுச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எங்களுடைய துறையில் இன்றும் பெண்களுக்கான அதிகமான வேலை வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தும் பெண்கள் அத்துறைகளுக்கு வரவது குறைவாகவே உள்ளது. இதற்கான  காரணம் என்னவென்பதுதான் தெரியவில்லை.

குறிப்பாக க.பொ.த உயர்தரத்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்ற பெண்கள் எங்களால் நடத்தப்படுகின்ற 1 வருட கூட்டுறவுப் பயிற்சியைப் பெற்றால் உடனடியாக அவர்களை வேலைவாய்ப்புடன் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அந்த வாய்ப்புகளை எங்களுடை பெண் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாமல் பின் நிற்கின்றார்கள். அதற்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை.

அன்பான சகோதரிகளே! உங்களுடைய உறவினர்கள், குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வேலைவாய்ப்பு இல்லாது வீட்டில் முடங்கியிருந்தால் அவர்களை எங்களோடு தொடர்புகொள்ளச் செய்யுங்கள். அவர்களுக்கு நாங்கள் உரிய பயிற்சிகளை வழங்கி மிகக் குறுகிய காலத்தில் வேலை வாய்ப்புக்களை எங்களது துறையில் பெற்றுக்கொடுக்க முடியும். அத்துடன் எமது கூட்டுறவு அமைப்பானது இலங்கை முழுவதுமே ஒரு ஜனநாயகத்தின் பயிலகமாகத்தான் செயற்பட்டு வருகின்றனர்.

ஒருவர் ஜனநாயக் ரீதியாக தன்னுடைய தலைமைத்துவ ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் அவர் அரம்பத்திலே கூட்டுறவு துறையினூடாக தன்னை வளர்த்துக் கொள்வதனூடாகவே ஒரு நல்ல தலைவராக சமூகத்திற்கு அவர் வரமுடியும்.

எங்கள் துறையில் வளர்ந்த தலைவர்கள் பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வந்திருக்கின்றனர். அதை நீங்கள் வரலாற்றில் பார்த்திருப்பீர்கள். அயலிலே கூட்டுறவு நிறுவனங்கள் இருக்கின்றன அவற்றில் நீங்கள் இணந்து உங்களுடைய சம வாய்ப்புகளை வழங்குங்கள். அதனூடாக உங்களுடைய ஜனநாயக் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம் பெண்கள் என்ற ரீதியில் எல்லோரும் அணிதிரண்டு எங்களுகென ஒரு பலமான சக்தியை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எந்தவொரு உரிமைப் போராட்டத்திலும் வேறுபட்ட அணிகள் காணப்படுமாயின் அந்த பேராட்டம் வெற்றி காண முடியாது. பெண்கள் ரீதிலும் பெண்களுக்கான விடுதலை என்ற ரீதியிலும் பெண்களுக்கான உரிமைகளுக்கான குரல் கொடுக்க வேண்டும் என்ற ரீதியிலும் நாங்கள் அணிதிரள்வோம். நாங்கள் ஒன்றாக சேருவாம் எங்களுக்குள்ளே இருக்கும் வேறுபாடுகள் எதுவாகயிருந்தாலும் அதை நாங்கள் மறந்து ஒன்றாக இணைந்து போராடுவதனூடாக எங்களது உரிமைகளை பெற்றக்கொள்ள முடியும்.

பெண்கள் என்றால் மென்மையானவர்கள், அவர்கள் விளம்பர பொருட்கள், அவர்களால் சிரிக்க முடியாது என்று சொல்வார்கள். அப்படியல்ல எங்களாலும் சிரிக்க முடியும் நாங்கள் வாழப் பிறந்தவர்கள், ஆளப் பிறந்தவர்கள் நாங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் எம்மை யாரும் அடிமைப்படுத்த முடியாது.

தனி மனிதன் என்ற ரீதியில் எமக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உரிமையை யாராலும் மறுக்க முடியாது. இவற்றை ஏற்கனவே நாங்கள் குறப்பிட்டது போல பெண்ணியம் என்பது ஆண்களும் பெண்களும் இணைந்து பெண்களுக்கான துயரங்களையும், இடர்பாடுகளையும் நீக்குகின்ற ஒரு செயற்பாடு என்ற அடிப்படையில் பெண்ணியம் என்ற குரலுக்க கீழ் நாங்கள் இணைந்து எங்களது உரிமைப் போராட்த்தை நாம் வெல்வோம்.

இங்கே பேசியவர்கள் எழுவோம் வெல்வோம் என்றார்கள். சுவாமி விவேகானந்தர் எழுந்திரு, விழித்திரு, காரியம் ஆகும்மட்டும் என்றார். ஆகவே எங்களுடை காரியம் ஆகும் மட்டும் நாங்கள்  வழித்தெழ வேண்டியவர்கள். எங்களுடைய முன்னாள் பெண்ணியவாதிகள் ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்கள் கடினமாக உழைத்து பெற்ற வெற்றிகளினூடாகத்தான் நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம்.  இல்லையெனில் நாங்கள் இந்த நிலையில் இருந்திருக்க முடியாது.

ஆகவே அவர்கள் எங்களுடைய மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.  அவர்கள் போராடி தந்த உரிமைகளை நாம் பேண வேண்டும். பாதுகாக்க வேண்டும். இதிலிருந்து நாங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். பெண்ணியம் என்பது மார்ச் 8ஆம் திகதி மட்டும் பேசப்பட வேண்டியதல்ல எப்போதும் எங்களுடைய இதயத்திலே நாங்கள் பெண்கள் எங்களுக்கும் உரிமை இருக்கின்றது என்ற துணிவு உங்களுக்கு வர வேண்டும். துணிவுடன் போராட வேண்டும் என்றார்.

Related posts: