பிள்ளைகளுக்குக் அதிக தண்டனை வழங்கும்போது அந்த வன்மம் மாற்றீட்டுக் கோபமாக மாறும் அபாயநிலை உருவாகின்றகு: – கோகிலா மகேந்திரன்

Monday, March 14th, 2016

பாடசாலைகளிலும், வீடுகளிலும் பிள்ளைகளை உடலியல் ரீதியில் தண்டிப்பதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் பிள்ளைகளுக்குக் கடும் தண்டனைகளை வழங்குகின்ற போது அந்த வன்மம், வலி மாற்றீட்டுக் கோபமாக மாறுவதற்கான அபாயநிலை காணப்படுகின்றது. ஆகவே, பெரியவர்களாகிய நாங்கள் வன்முறைகள் அதிகம் பிரயோகிப்பதைத் தவிர்ப்பதற்கு முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளரும், உளவளத் துணையாளருமான திருமதி. கோகிலா மகேந்திரன்.

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழா அண்மையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது சிறப்புப் பேச்சாளராகக்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உலகத்தில் 150 மில்லியன் பிள்ளைகள் ஒரு வருடத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுகிறார்கள். உலகத்திலே 73 வீதமான பெண்கள் இணையத்தளப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. 2015 ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை 1854 வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்யப்பட்டதை விட முறைப்பாடு செய்யப்படாத பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவிருக்கும். ஏனெனில், அவ்வாறு முறைப்பாடு செய்தால் தமது குடும்பத்துக்கு இழுக்கு, கெளரவக் குறைவு. அதனால், பேசாமலிருப்போம் எனப் பெரும்பாலான குடும்பங்கள், பிள்ளைகள்   நினைக்கிறார்கள். அதனால் உண்மையான தரவுத் தொகை இதனை விட மூன்று மடங்காகவிருக்கும்.  இந்த வன்முறைகளில் 1550 வன்முறைகள் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் கொடூரமான விடயம்.

ஆகவே,இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டுமெனில் ஒவ்வொரு  குடும்பத்திலிருந்தும் மாற்றம் உருவாக வேண்டும். பிள்ளைகளை நாங்கள் மென்மையாக வளர்க்க வேண்டும்.

குடும்பங்களில் ஆண் பிள்ளைகள்  வளர்ப்பதிலும், பெண் பிள்ளைகள் வளர்ப்பதிலும் வித்தியாசமிருக்க வேண்டியதில்லை. பெண்கள் மென்மையானவர்கள். ரோஜாப் பூப் போன்றவர்கள். ஆகவே, பிங் கலரில் தான் உடுப்பு அணிய வேண்டும். ஆனால், ஆண்கள் வன்மையானவர்கள். ஆழமானவர்கள். ஆகவே, நீல நிறத்தில் தான் உடை அணிய வேண்டும்  என்ற எண்ணத்தைப் பிறந்தவுடனேயே விதைத்து விடுகிறோம்.இந்த நிலை மாற வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதில்  தவறு ஆண்கள் தரப்பில் மாத்திரமல்ல . பெண்களின்  செயற்பாடுகள், அவர்கள் நடந்து கொள்ளும் முறை என்பவற்றிலும்  அடங்கியிருக்கிறது.

ஆகவே  வன்கொடுமைகள் யாவும் நீங்கி நாங்கள் மீண்டும் கெளரவமானதொரு சமூகமாக மாற்றம் பெறுவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: