பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!

Wednesday, May 16th, 2018

“எழுத்துச் சித்தர்’ என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் பாலகுமாரன் உடல் நலக்குறைவால் தனது 71 ஆவது வயதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்ற இடத்தில் 1946}ஆம் ஆண்டு ஜூலை 5}ஆம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று தனியார் அலுவலகத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின் தனியார் டிராக்டர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பதவி வகித்தார்.

274 நாவல்களின் “நாயகன்’: 1969}இல் கவிதைகள் எழுதத் தொடங்கினார். கணையாழி உள்ளிட்ட சில இதழ்களில் அவை வெளிவந்தன. அதன் பின்பு சிறுகதைகள் எழுதுவதில் நாட்டம் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 274 நாவல்களையும் எழுதியுள்ளார். ஆரம்பத்தில் கம்யூனிஸ ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த பாலகுமாரன், பின்னர் திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாரை ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டார். யோகி ராம்சுரத்குமார் பெயரை முதலில் எழுதிய பின்பே எந்தப் படைப்பையும் எழுதும் அளவுக்கு அவர் ஈடுபாடு இருந்தது.

தாயாரிடம் பயிற்சி: பாலகுமாரனுக்கு இலக்கியப் பயிற்சியை அளித்தவர் அவரது தாயார் தமிழ்ப் பண்டிதர் சுலோசனா. தாய் அளித்த பயிற்சியே எழுத்தில் சிறந்து விளங்க உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கையடக்க நாவல் புத்தகங்களில் கிரைம் நாவல்களே கோலோச்சி வந்த நிலையில், அதை முழுமையாக மாற்றி குடும்ப நாவல்கள் வரச் செய்த பெருமை பாலகுமாரனைச் சாரும்.

குடும்பத்தின் முக்கியத்துவம், பெண்களை மதிக்க வேண்டியதன் அவசியம், சுயத்தை உணர்தல், தனிமனித மேம்பாட்டுடன் கூடிய சமூக மேம்பாடு போன்ற கருத்துகளை எளிய நடையில் எழுதியவர். பத்திரிகை ஆசிரியர் சாவி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல எழுத்தாளர்களில் பாலகுமாரனும் ஒருவர். இவரது முதல் தொடர் “மெர்க்குரி பூக்கள்’, “சாவி’ வார இதழில் வெளியானது. ஒரே சமயத்தில் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், “சாவி’ எனப் பிரபலமான 7 இதழ்களில் தொடர்கள் எழுதினார். பாலகுமாரனின் நாவல்களை மட்டும் பதிப்பிப்பதற்காகவே பதிப்பகங்கள் நடத்தியவர்கள் உண்டு.

பல்துறை எழுத்தாளர்: ஒரு படைப்பை எழுதுவதற்கு முன்பு அது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதக் கூடியவர். பல்வேறு தொழில்கள் குறித்து ஆராய்ந்து, உள்ளதை உள்ளபடியே விளக்கி எழுதியுள்ளார். லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கறிச் சந்தை, நகை வியாபாரம், தொல்பொருள் ஆராய்ச்சி, விலங்கு மருத்துவம் என பல துறைகளின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது போல் எழுதி சக மனிதர்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் திறன் பெற்றவர். இலக்கியத் துறையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.

முக்கியப் படைப்புகள்: இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், அகல்யா, கரையோர முதலைகள், திருப்பூந்துருத்தி, ஆனந்தயோகம், ஆனந்த வயல், கங்கை கொண்ட சோழன், ஏதோ ஒரு நதியில் என்று அவரது முக்கிய நாவல்களின் பட்டியலே நீளும். தஞ்சை பெருவுடையார் கோயில் குறித்து ஆய்வு செய்து எழுதிய “உடையார்’, அவரின் சாதனை எழுத்துக்குச் சான்றாகும்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி}பதில், சுயசரிதை என எழுத்தின் அத்தனை வகைமைகளிலும் வாசகர்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசப்படுத்தி வைத்திருந்தார். “இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற அவரின் சுயசரிதை பெரிதும் வாசகர்களைப் பாதித்தது. இது ஒரு படத்தின் தலைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு, அதன் தலைப்பே அனைவராலும் கொண்டாடப்பட்டது.

விருதுகள்: இரும்பு குதிரைகள் நாவலுக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை பரிசு, மெர்க்குரி பூக்கள் நாவலுக்கு இலக்கிய சிந்தனைப் பரிசு, சுகஜீவனம் நாவலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு, கடற்பாலம் சிறுகதை தொகுப்புக்கு தமிழக அரசின் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.

குடும்பத்தினர்…பாலகுமாரனுக்கு ஸ்ரீகெஜரி என்ற மகளும் வேங்கடராமன் என்கிற சூர்யா என்ற மகனும் உண்டு. மகன் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

இன்று இறுதிச் சடங்கு: பாலகுமாரனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும், அவரது வாசகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பாலகுமாரனின் இறுதிச் சடங்கு புதன்கிழமை காலை 10.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது.

திரையுலகப் பயணம்!

இயக்குநராகும் ஆர்வத்தில் திரையுலகில் நுழைந்து, வசனகர்த்தாவாகப் புகழ் பெற்று, அழிக்க முடியாத வசனங்களை பாலகுமாரன் தந்துள்ளார்.

சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தரசொப்பனங்களு (கன்னடம்) ஆகிய மூன்று படங்களில் இயக்குநர் கே.பாலசந்தருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இயக்குநர் பாக்யராஜுடன் சில படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

பாக்யராஜின் மேற்பார்வையில் “இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கினார். அதன் பின் வசனகர்த்தாவாக மட்டுமே பணியாற்றினார்.

குணா, நாயகன், செண்பகத் தோட்டம், ஜென்டில்மேன், காதலன், கிழக்குமலை, மாதங்கள் ஏழு, ரகசிய போலீஸ், பாட்ஷா, சிவசக்தி, உல்லாசம், வேலை, ஜீன்ஸ், சிட்டிசன், மஜ்னு, கிங், உயிரிலே கலந்தது, மன்மதன், கலாபக் காதலன், முகவரி, புதுப்பேட்டை, வல்லவன் உள்ளிட்ட 23 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில், “நான் 1 தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி’ என்ற வசனம், கமல் நடித்த நாயகன் படத்தில் “நீங்க நல்லவரா, கெட்டவரா’ போன்ற அவரது வசனங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரைப்படங்களில்…பாலகுமாரன் திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியுள்ளார். இயக்குநர் வசந்த்தின் முதல் திரைப்படமான “கேளடி கண்மணி’யில் ஆசிரம நிர்வாகியாக படத்தின் கடைசி 20 நிமிஷங்களில் வரும் காட்சியில் நடித்தார். அந்தப் படத்தில் தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பதுகூட கடினமாக இருக்கும். அஜித் நடித்த “உல்லாசம்’ படத்தில் பேருந்து நடத்துநராகவும், “இது நம்ம ஆளு’ படத்தில் ஓர் உணவகத்தின் மேலாளராகவும் நடித்துள்ளார்.

விருது: தமிழக அரசின் கலைமாமணி விருதையும், காதலன் படத்துக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான மாநில அரசின் விருதையும் பெற்றார். “குணா’ படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றுள்ளார்.

Related posts: