பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Thursday, February 25th, 2021

பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநனாயக கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்த் வேலணை பிரதேச சபைக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சபை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைத்திருந்து முன்மொழிவுக்கான அங்கீகாரத்தை சபை வழங்கியுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிவசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் முன்மொழிவொன்றை சமர்ப்பித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

வேலணை பிரதேசத்தினதும் பிரதேச சபையினதும் அபிவிருத்தியை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களும் யோசனைகளும் எமது சபையாலும் சபை உறுப்பினர்களாலும் முன்மொழியப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் எமது சபைக்கான ஒரு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத் தொகுதி ஒன்று இதுவரை இல்லாது காணப்படுகின்றது.

யாழ் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச சபைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு அவை தத்தமது சேவைகளை முன்னெடுத்துவரும் நிலையில், இன்னமும் எமது சபை போதியளவான வசதிகளற்ற நிலையிலேயே காணப்படுகின்றமை வேதனையானதொன்று.

இந்நிலை மாற்றப்படவேண்டும். தொடர்ந்தும் பின்தங்கிய பிரதேசமாக எமது பிரதேசத்தை கூறுவதற்கு இனியும் நாம் இடமளிக்க முடியாது. எம்மால் முடியுமானவரையில் எமது பிரதேசத்தை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப நாம் அனைவரும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம் தீவகத்தின் கேந்திர மையமாக விளங்கும் வேலணையின் நகரமான வங்களாவடியை நாம் அபிவிருத்தியால் கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும். அதற்கான பல முன்னெடுப்புகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எமது சபையின் அபிவிருத்தியையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

எமது சபை குறைந்தளவான கட்டட வசதிகளுடன் தற்போது இயங்கிவருகின்ற நிலையில், எமது பிரதேச சபையும் ஏனைய பிரதேசங்களைப் போன்று நவீன வசதிகளுடன் ஆளணி பற்றாக்குறையற்ற சபையாக மக்களுக்கு சேவையை செய்ய, ஒரு நவீன கட்டட தொகுதியை அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் தற்போது நாட்டின் அரச தலைவரால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கான முக்கியத்துவத்தின் கீழ் எமது பிரதேச சபையையும் நாம் முன்நிறுத்த முடியும் என்ற எதிர்பார்ப்புடன், எமது சபைக்கான நவீன வசதிகளுடன் கூடிய பிரதேச சபைக் கட்டடத்தை நிர்மாணிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் இந்நிலையிலேயே வேலணை பிரதேச சபைக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: