பாரதப் பிரதமரின் வருகை இலங்கை தொடர்பில் உலகுக்கு பல செய்திகளை சொல்லும்- இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்!

Saturday, June 8th, 2019

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் இலங்கை விஜயம் சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை வழங்குவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும், மாலைதீவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கை, சுற்றுலா மேற்கொள்ள சிறந்த இடம் என்ற செய்தி பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் ஊடாக வெளிப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள மோடி, நாளைய தினம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய நாளை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை, பேலியாகொடை மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் வரையும், பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் வானுர்தி நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: