பாதுகாப்பை உறுதியாகும்வரை மாணவர்களை அனுப்பமாட்டோம்!

Friday, July 22nd, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து வெளியேறிய தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும்வரை தமது பிள்ளைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்போவதில்லையென சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பெற்றோர்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தமக்குத் திருப்பதியளிக்கவில்லை. பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் பேருந்தில் வவுனியாவரை கொண்டுவந்து விடப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்களின் பாதுகாப்புப் பற்றிக் கரிசனை கொள்ளவில்லை.

மோதல் நடைபெற்ற 40 நிமிடங்கள் கழிந்தபின்ரே அவ்விடத்திற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் வருகைதந்தனர்.யாழ். பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையாக கல்விகற்கும் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்கும் இடையில் எந்த பிரச்சினைகளும் இல்லை.

சில கலைப்பீட மாணவர்கள் மாத்திரமே தாக்குதலில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும்வரை தமது பிள்ளைகளை அங்கே அனுப்பப்போவதில்லை. இது தொடர்பான மனுவை, தாம் ஜனாதிபதி, பிரதமர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: