பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடல்!

Tuesday, July 20th, 2021

தெற்காசியாவின் நுழைவாயிலாக விளங்கும் கொழும்புத் துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை எடுத்துரைத்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, இந்த விஷேட பொருளாதார வலயத்தின் ஏராளமான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

மத்தியகிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத் பின் ரஷீத் அல் சயானியுடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தொலைபேசி வாயிலாக கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இலங்கையின் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தக் கலந்துரையாடல் மன்னெடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை இரு அமைச்சர்களும் ஆராய்ந்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின்போது பிராந்திய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாறியுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பஹ்ரைன் அரசாங்கம் செயற்படுத்திய நடைமுறைகள் குறித்து பஹ்ரைன் அமைச்சர் அல்-சயானி விரிவாக விளக்கியுள்ளார்.

சுற்றுலாத்துறைகளிலான ஒத்துழைப்பு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்கபூர்வமான பொருளாதாரம் மற்றும் பல்தரப்பு அரங்கு உட்பட பரஸ்பரம் ஆர்வமுள்ள பல துறைகள் குறித்தும் இதன்போது அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலை பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் பிரதீபா சரம் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: