பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு – வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட தேர்தல் செயலகத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

Monday, June 1st, 2020

பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளையதினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கட்டம் கட்டமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளமையினால் நாளைய தினத்துடன் பலகலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைய உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட தேர்தல் செயலகத்துக்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 15 திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு ஆகியன கல்வி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் அடிப்படையில், இருப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாக, கடந்த 5 வருடத்துக்கான வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு பிள்ளைகளை இணைத்துக் கொள்வதற்காக, விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான தகவல்களை கிராம உத்தியோகத்தரிடம் அல்லது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இயலுமானவரையில் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: