அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அஸ்வெசும வாரம் – நிதியமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 31st, 2023

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள் நிவாரணப் பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் நிவாரண பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கும் பணி நாளைமுதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும். அதன்பிறகு, செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு, அடுத்த மாதத்தின் இறுதிக்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை.

ஆனால் பணம் கொடுப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைத் தீர்த்து, பணம் செலுத்துவதை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வங்கிக் கணக்குகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தன. இந்த வாரத்திற்குள் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில், வறிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது என்பதை அரசு நன்கு உணர்ந்துள்ளது.

எனவே, பணம் வழங்குவதைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: