பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு – பருத்தித்துறை நீதிமன்று கடும் எச்சரிக்கை!!

Friday, June 1st, 2018

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தமது கிளைக்கடைகள் ஊடாக உலர் உணவுப் பொருள் களை வழங்குவதால், நுகர்வோரின் உடல்நிலையில் அக்கறையுடன் செயற்பட கடைகளைச் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டியது கட்டாயம். நுகர்வோரின் உடல்நலத்துக்குக் கேடான முறையில் கிளைக் கடைகள் இயங்கினால் அவற்றைச் சீல் வைத்து மூடத் தயங்கமாட்டேன்.

இவ்வாறு பருத்தித்துறையில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளருக்குப் பருத்தித் துறை நீதிவான் எச்சரிக்கை விடுத்தார்.

பருத்தித்துறைப் பகுதியில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிளைக்கடைகளில் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர் திடீர்ப் பரிசோதனை நடத்தியபோது பூச்சி மொய்த்த, பதனிழந்த உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தமை, போதிய களஞ்சிய வசதி இல்லாமை, உணவுப் பொருள்களில் எலி எச்சங்கள் காணப்பட்டமை, உணவுப் பொருள்களுக்கு அண்டிய பகுதியில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் மண்ணெண்ணெய் வைத்திருந்தமை, கிளைக்கடையின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்பு காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டன.

இவ்வாறு இரண்டு கிளைக் கடைகளுக்கு எதிராக பருத்தித்துறை பிரிவு 11 பொது சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டன. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் மன்றில் முற்பட்டார். அதன்போதே நீதிவான் மேற்படி உத்தரவிட்டு எச்சரித்தார்.

ஒரு வார காலத்திலிருந்து கிளைக் கடைகள் அனைத்தும் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொது சுகாதார பரிசோதகர் திருப்திப்படும் வகையில் சுகாதார சீர்கேடுகள் சீர்செய்யப்பட வேண்டும் என்று நீதிவான் அறிவுறுத்தினார்.

இரண்டு கடைகளிலும் காணப்பட்ட 7 குற்றச் சாட்டுக்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் 35 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து ஏனைய கடைகளையும் ஒரு வார காலத்தினுள் சுகாதார நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தவறின் அவற்றைச் சீல் வைக்க உத்தரவிடநேரிடும் என்றும் நீதிவான் உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: