பரீட்சைத் திணைக்களத்தின் பிரச்சினைக்கு காரணம் என்ன?

பரீட்சைகள் திணைக்களத்தில் பெரும் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்படுகின்றது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தின் விஞ்ஞான பாட வினாத்தாள் வெளியானது முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 2017 ஆம் ஆண்டுக்கான பரீட்சை வினாக்கள் வெளிநபரொருவரின் புத்தகமொன்றில் வெளியிடப்பட்டது வரை பல்வேறு பிரச்சினைகள் பரீட்சைத் திணைக்களத்தில் ஏற்பட்டிருந்தன.
இந்தச் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகத் தீர்வுகள் காணப்பட்டது. அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் பரீட்சைகள் திணைக்களத்தில் உண்மை நிலையை கல்வி அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இரகசியப் பிரிவின் ஆணையாளர் ஒருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த இடமாற்றமும், இடைநிறுத்தமும் பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாதென்பதால் அமைச்சர் நியமித்த குழுவின் தீர்மானம் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ள அறிக்கையை நாட்டுமக்களுக்கு வெளியிடவேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாகவும் முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
சாதாரண தரம், உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகள் மட்டுமன்றி பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் ஆள் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான போட்டிப் பரீட்சைகள் அனைத்தும் பரீட்சைகள் திணைக்களத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
பரீட்சைகள் திணைக்களம் மக்களது வாழ்க்கையுடன் தொடர்புபட்ட நிறுவனமாகும். கடந்த காலத்தில் பரீட்சைகள் திணைக்களத்தில் கடமையாற்றிய மூத்த அதிகாரிகள் அரச செலவில் பரீட்சைகள் தொடர்பான பட்டபின் படிப்பு மற்றும் ஏனைய பாடத்திட்டங்கள் தொடர்பாக வெளிநாடுகளில் பயிற்சி பெற்றிருந்த நிலையில் அவர்கள் கல்வி அமைச்சின் ஏனைய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.
பரீட்சைகள் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டதே தவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பரீட்சைகள் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள நிலைக்குப் பொறுப்பான நபர் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு பரீட்சைகள் திணைக்களத்தின் நம்பகத்தன்மை மற்றும் பரீட்சை செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|