பணத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர் – வடக்கு கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.ஏ.ஆலம் குற்றச்சாட்டு!

Friday, August 19th, 2016

சட்ட விரோதமான மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடமிருந்து பணத்துக்கு ஆசைப்பட்டு  அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றார்கள். எமது மீனவர்களின்  வாழ்வாதாரம் அழிவடைந்து செல்வதற்கு இவ்வாறான அதிகாரிகளும் ஒரு காரணமாக இருக்கின்றனர்.இவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில்  கதைக்கவேண்டும் எனத் தெரிவித்தார்  வடமாகாணக்  கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.ஏ.ஆலம்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை(18)  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் பிரதித்துவப்படுத்தும் நான்கு மாவட்டங்களில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சட்டவிரோதமான  தொழிலை நிறுத்துவதில் அசமந்தம் காட்டியதனால் இழுவை மடித்தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக  மன்னார் மாவட்டத்தில் 50,60 இழுவை மீன்பிடிப்படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது 300 ஆக இந்தத் தொகை அதிகரித்துள்ளது. இதனைத் தடைசெய்யவேண்டிய அதிகாரம் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு இருக்கின்றது. ஆனால், அவர்கள் இந்தத் தொழிலைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அசமந்தப்  போக்கில் செயற்படுகின்றனர். தென்பகுதியில் இழுவைமடித்தொழில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தில் இந்த இழுவை மடித்தொழில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

தங்கூசி வலைகளைப்  பிடித்துவிட்டு நாங்கள் தடைசெய்யப்பட்ட இழுவை மடித்தொழிலை நிறுத்திவிட்டோம் என்று அமைச்சர்,மற்றும் பணிப்பாளர்களுக்கு நல்லபேர் எடுப்பதற்காகச் செய்யும் வேலைத் திட்டங்கள் வடக்கு மீனவர்களுக்கு  எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுத் தராது.  திணைக்களத்திலுள்ள அதிகாரிகள் முறையாகப்  பணி ஆற்றா விட்டால் அவர்களைப்  பணிமாற்றம் செய்யுங்கள் எனவும் கோரிக்கை விடுத்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தலைவரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான நிஹால் ஹலப்பதி, முன்னாள் தென் மாகாண சபையின் உறுப்பினர் ரத்ன கமகே மற்றும் யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related posts: