பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீள்குடியேற 233 குடும்பங்கள் பதிவு!

Thursday, July 20th, 2017

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இத்தாவில் முகமாலை வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற 233 குடும்பங்கள பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்

முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பல இடங்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதுவரை விடுவிக்காத பகுதிகளில் மீள்குடியேறுவதற்காக 233 குடும்பங்களும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது இத்தாவில் பகுதியில் 08 குடும்பங்களும், முகமாலை பகுதியில் 86 குடும்பங்களும், வேம்பொடுகேணி பகுதியில் 139 குடும்பங்களும், விண்ணப்பித்துள்ளன. இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த அதிகளவான மக்கள் இன்னும் பதிவுகளை மேற்கொள்ளவில்லை.

கடந்த வருடமும் விடுவிக்காத பகுதிகளில் குடியமர என குறைந்தளவான குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தன. எனினும் அந்த பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர் 78 குடும்பங்களைச்சேர்ந்த 245 பேர் மீள் குடியமர்ந்துள்ளனர். இந்த பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களில் 52 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் உட்பட வசதிகளை பெற்று தருமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.மேலும் இவர்களுக்கான வீட்டுத்தேவை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு நாங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றோம் என பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் குறிப்பிட்டுள்ளார்

Related posts: