பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, May 26th, 2021

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைவு திட்டம் அமைச்சர்களினால் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இத்திட்டங்கள் கையளிக்கப்பட்டது.

முன்பதாக உரப்பாவனை, நிலம், உயிர்ப்பல்வகைமை, கழிவு முகாமைத்துவம், வளிமண்டலம், கைத்தொழில், மீள்ப்பிறப்பாக்க சக்திவலு, நகர் மற்றும் சுற்றாடல் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அடைந்துகொள்ள வேண்டிய இலக்குகளுடன் திட்டங்களை வரைவதற்கு ஜனாதிபதியினால் குறித்த அமைச்சர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் அமைச்சுக்களின் மூலம் விரிவான ஆய்வுகளின் பின்னர் எதிர்கால செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் முக்கிய சுற்றாடல் வலயங்களை இனங்காண்பதுடன், காடுகளை அதிகரிப்பது மற்றும் வன ஒதுக்கீடுகளில் வனப் பகுதியை அதிகரிப்பதற்காக இனங்காணப்பட்ட நிலங்களில் மரங்கள் நடுவதனை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதற்காக சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் கைவிட்டிருக்கும் காணிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளினுள் உள்ள சேனைகள், வேகமாக பரவும் களைகள் பரவியுள்ள காணிகள் மற்றும் ஈர வலயங்களில் பைனஸ் மரங்கள் நடப்பட்டுள்ள காணிகளை பயன்படுத்துதல் தொடர்பாகவும் வழிகாட்டல் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வனப் பகுதிகளை 2025ஆம் ஆண்டாகும் போது 30 வீதம் வரை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். அது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது நாட்டின் வன அடர்த்தியை அதிகரிக்கும்போது மனித பாவனைக்கும் மிருகங்களின் உணவுக்காக பயன்படுத்தக்கூடிய பலா, ஈரப்பலா, பழங்கள் போன்ற பயிரினங்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிரருந்தார்.

அதேநேரம் 2030ஆம் ஆண்டாகும்போது நாட்டின் வலு சக்தி தேவையின் 80 வீதத்தினை மீள்ப்பிறப்பாக்க வலு சக்தியின் மூலம் நிறைவு செய்வது அரசாங்கத்தின் இலக்காகும். வரலாற்றில் முதன்முறையாக டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளின் அளவை விடவும் அதிகமான அளவு காற்று விசை மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்ய முடியுமாக இருந்ததாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

அத்துடன் பிளாஸ்டிக் பாவனையை மேலும் குறைப்பதற்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை கல்வி பாடத்திட்டம், இணைச் செயற்பாடுகளின் போது சுற்றாடல் மற்றும் உயர் பல்வகைமையை அடிப்படையாகக்கொண்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு அகற்றப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்வதன் முக்கியத்துவமும் அதற்கான மாற்றீடுகளை அறிமுகம் செய்யும் வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல் அலங்கரிப்பு தொடர்பாக விசேட கவனம் செலுத்தி, அதற்கிணையாக மர நடுகையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: