நெடுந்தீவுச் சர்ச்சை தொடர்பில் சட்டமா அதிபரிடம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆலோசனை!

Tuesday, August 28th, 2018

நெடுந்தீவு பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள உபதவிசாளர் தேர்வு சர்ச்சை காரணமாக பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளதை அடுத்து அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சட்ட ஆலோசனை தொடர்பான விளக்கத்தை கோரி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் உதவி கோரியுள்ளார்.

13 உறுப்பினர்களை கொண்ட நெடுந்தீவுப் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 6 ஆசனங்களை பெற்றுள்ள நிலையிலும் அதன் ஆட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் உபதவிசாளர் சுகவீனத்தால் உயிரிழந்தமையால் அந்தப் பதவி வெற்றிடத்தை நிரப்பக்  அந்தக் கட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் அந்த உபதவிசாளர் பதவிக்கான உறுப்பினரை தெரிவு செய்ய கடந்த இரு மாதங்களில் 4 தடவைகள் சபை கூடியிருந்தது. ஆனாலும் சபையில் கோரம் இன்மையால் தேர்வு நடைபெறவில்லை.

இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவுறுத்தலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் சட்டமா அதிபருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தெரிவுக்கள் தேர்தல் சட்டத்துக்கு கீழேயே நடைபெறுகின்றது என்பதாலும், இதற்கு முன்னர் இவ்வாறானதொரு நிலமை ஏற்பட்டிருக்கவில்லை என்பதாலுமே சட்டமா அதிபரின் ஆலோசனையை, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியே, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகின்ற போதிலும் இது தொடர்பான எதுவித நகர்வுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: