நூலக பாடம் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும் – உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர்!
Tuesday, June 12th, 2018இன்றைய மாணவர்கள் பொதுவிடயங்களை அறிவதில் ஆர்வமற்றவர்களாகவும் அதனைப் பெற்றுக் கொள்வதில் நேரமற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
எனவே பாடசாலைகளில் நூலக பாடத்தை கிழமையில் ஒரு பாட வேளையாவது மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என்று உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்றைய மாணவர்கள் கல்வியை வினா – விடையாகவே கற்றுவருகின்றனர். பரீட்சைக்கு மட்டுமே தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
பரீட்சையில் சித்தியடைந்தால் மட்டும் போதும் என்ற நிலை உருவாகி வருகின்றது. இதனால் ஆளுமை மிக்க ஆற்றல் மிக்க மாணவர்கள் உருவாகும் சந்தர்ப்பத்தை பாடசாலைகள் உருவாக்க வேண்டும்.
பாடசாலைகளில் நூலகங்களை தரமுயர்;த்தி வரலாறு, தத்துவம், மொழியியல், பொதுஅறிவு, புராண இதிகாச புத்தகங்கள் எனப் பல்துறை சார்ந்த புத்தகங்களை வாசிக்க ஊக்கமளிக்க வேண்டும். பத்திரிகைகளை வாசிப்பதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலமே அன்றாட பிரச்சினைகளை வாசித்து அறிந்து தம்மை தயார்படுத்தி கொள்வார்கள்.
இதைவிடுத்து எட்டுப் பாட வேளையும் பாடங்களை கட்டாயமாக்குவதால் மாணவர்களின் மூளைகளைப்படைந்து விடுகின்றது. இதனால் பாடங்களையும் அவர்கள் முழுமையாக கவனித்து செயல்பட மாட்டார்கள்.
இதன்மூலம் சிறந்த கல்வி அடைவு மட்டம் முழுமை அடையமாட்டாது. மாணவர்களை புத்தகப்பூச்சிகளாக உருவாக்காது சிறந்த ஆளுமை, ஆற்றல் மிக்க கல்விமான்களாக உருவாக்க வேண்டுமானால் நூலக பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
பொது விடயங்கள் பற்றி முழுமையாக அறிய முடியாத மாணவர்கள் சமூக அமைப்புக்கு ஏற்ப தம்மை மாற்ற முடியாது உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே நூலக பாடத்தின் தேவையை உணர்ந்து மாணவர்களை வாசிப்பு பழக்கத்துக்கு இட்டுச் செல்ல நூலக பாடத்தை கட்டாய பாடமாக்கி மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாகவும் சிந்தனை மிக்கவர்களாகவும் உருவெடுக்க வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
Related posts:
|
|